பொது

ஜாசினில் தீச்சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

13/02/2025 05:08 PM

ஜாசின், 13 பிப்ரவரி (பெர்னாமா) - இன்று அதிகாலை மலாக்கா ஜாசின், உம்பையில் உள்ள கம்போங் பெராங்கான் எனாம்மில் வீடொன்று தீ பிடித்ததில் நான்கு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள், 37 வயதுடைய தாயாரும், 13,7,6 மற்றும் 4 வயதுடைய அவரின் நான்கு பிள்ளைகளும் ஆவர் என்று ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்ட்டென்டன் முஹமட் ருஸ்லி மாட் தெரிவித்தார்.

இவ்விபத்தில், அச்சிறுவர்களின் தந்தை மட்டுமே அண்டை வீட்டாரின் உதவியுடன் உயிர் தப்பியுள்ளார்.

"உயிர் தப்பிய கணவர் கடந்த ஜனவரி மாதத்தில் சாலை விபத்திற்குள்ளாகி அவரின் கால் எலும்பு முறிந்தது. அவர் ஜன்னல் வழியாக வெளியேறியுள்ளார். தற்போது சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்," என்று முஹமட் ருஸ்லி  கூறினார். 

இதனிடையே, இன்று அதிகாலை மணி 1.40-க்கு இச்சம்பவம் குறித்து தங்கள் தரப்புக்கு தகவல் கிடைத்ததும் மெர்லிமாவ் மற்றும் பாடாங் தெமு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மலாக்கா மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை JBPM இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது சம்பந்தப்பட்ட வீடு 80 விழுக்காடு தீக்கிரையாகி இருந்தது.

இச்சம்பவத்திற்கான காரணம் மற்றும் இழப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)