சிங்கப்பூர், 17 பிப்ரவரி (பெர்னாமா) -- நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன இரண்டு குற்றச்சாட்டுகளில் சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் ப்ரீதம் சிங் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினால், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு தடை விதிக்கப்படலாம்.
2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் செயற்குழுவிடம் ப்ரீதம் சிங் பொய் கூறியதாக நீதிபதி தெரிவித்தார்.
இவ்வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட அவருக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் 7,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பு குறித்து, தமது தரப்பு மேல்முறையீடு செய்யும் என்று ப்ரீதம் சிங் தெரிவித்தார்.
சிங்கப்பூர் அரசியலமைப்பின் படி, குறைந்தபட்சம் 10,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் அல்லது குறைந்தபட்சம் ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)