பன்னு, 05 மார்ச் (பெர்னாமா) -- வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் மேலும் 18 பேர் காயத்திற்கு ஆளாகினர்.
இந்த எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினரை உட்படுத்திய உயிரிழப்புகளைச் சேர்க்கப்படவில்லை என்று வடக்கு மாவட்டமான பன்னுவின் போலீஸ் தலைவர் சியா யு டின் கூறினார்.
சிறுவர்கள் உட்பட காயமடைந்தவர்களில் பலர், பன்னுவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் காரணமாக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தாக்குதலை நடத்தியத் தரப்பு குறித்து உடனடியாக தெளிவான தகவல்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை.
ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் போலீஸ் மற்றும் இராணுவத்திற்கு எதிராக தலிபான் இஸ்லாமிய போராளிக் குழுவின் தாக்குதல்கள் அண்மைய காலமாக அதிகரித்து வருகின்றன.
மற்றொரு நிலவரத்தில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு இடையிலான முக்கிய எல்லைப் பகுதியில் திங்கட்கிழமை இரவில் நடைபெற்ற மோதல்களினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
ஆனால், செவ்வாய்க்கிழமை காலைக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்ததோடு, அமைதியாகக் காணப்பட்டதாக குடியிருப்பாளர்களும் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் இருந்து உணவு இறக்குமதி வழக்கமாக ஆப்கானிஸ்தானில் உச்சத்தில் இருக்கும் ரமலான் மாதத்தின் முதல் நாளான திங்கட்கிழமை மோதல் தொடங்கியது.
ஆப்கானிய எல்லைக் காவலர்கள் முன்னறிவிப்பின்றி அரசாங்க கட்டிடங்களையும் பொதுமக்களையும் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த மோதல்கள் காரணமாக சுமார் 15,000 உள்ளூர்வாசிகள் லண்டி கொதல் நகருக்குத் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)