கிள்ளான், 06 மார்ச் (பெர்னாமா) -- கடந்த மாதத்தில், கிள்ளானில், வடக்கு மற்றும் மேற்கு துறைமுகத்தில் வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் 70 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட மதிப்பிலான வேன் பெட்டிகள், மதுபானம் மற்றும் புகையிலை ஆகியவற்றை சிலாங்கூர் மாநில இரண்டாவது மத்திய மண்டல அரச மலேசிய சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த ஜூன் 7-ஆம் தேதி, வடக்கு துறைமுகத்தில் ஐந்து கொள்களன்களை பரிசோதனைச் செய்ததில் எட்டு லட்சத்து 80 ஆயிரத்து 861 ரிங்கிட் மதிப்பிலான 10 வேன் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத்துறை துணை தலைமை இயக்குநர் டாக்டர் அஹ்மட் தௌஃபிக் சுலைமான் தெரிவித்தார்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் சிறப்பு பெர்மிட் அனுமதியை அந்த வர்தகம் கொண்டிருக்காததோடு, சுங்க விதிமுறையில் நிர்ணயிக்கப்பட்ட சில தகுதிகளையும் கொண்டிருக்கவில்லை.
அதைத் தவிர்த்து, கடந்த ஜனவரி 9ஆம் தேதி மேற்கு துறைமுகத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 868 பாட்டில்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 251 ரிங்கிட் மதிப்புடைய 607.60 லிட்டர் மதுபானமும் கண்டெடுக்கப்பட்டது.
இரண்டு நாட்களுக்குப் பின்னர், மேற்கு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 16 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 39,000 பாட்டில்களும் 48,000 டின்களிலும் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மேற்கு துறைமுகத்தில் உள்ள கொள்கலனில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 43 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய 20,418 கிலோகிராம் புகையிலையும் கண்டெடுக்கப்பட்டது.
1967ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டம் செக்ஷன் 135 (1)(a) மற்றும் செக்ஷன் 133(1)(a)-இன் கீழ், இம்மூன்று வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)