ஈப்போ, 09 ஜூன் (பெர்னாமா) -- பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை போல வைகாசி விசாகம் என்பதும் முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த திருநாளாகும்.
அவ்வகையில், 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பேராக், ஈப்போ, ஜாலான் லாகாட்டில் வீற்றிருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் இவ்வாண்டும் வைகாசி விசாகம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில், காலை மணி 9.30-க்கு முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, தீபாராதனை செய்து வழிபாடு நடைபெற்றது.
பக்தர்கள், காலை தொடங்கி பால்குடங்களையும் காவடிகளையும் ஏந்திக் கொண்டு தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தியதாக, ஆலய பொறுப்பாளர் வள்ளியப்பன் அடைக்கலவன் கூறினார்.
''ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழா அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்று திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு பால்குடங்களையும், காவடிகளையும் ஏந்திக் கொண்டு, தற்போது அபிஷேகம் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதுவரை, சுமார் 200 பால்குடங்கள் வந்திருக்கின்றது. காவடிகளும் நிறைய வந்திருக்கின்றது. அதை தவிர்த்து தொட்டில் காவடிகளும் வந்திருக்கின்றது'', என்றார் அவர்.
இன்று, பள்ளி விடுமுறை என்பதால், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்குத் திரளாக வருகைப் புரிந்தனர்.
''இங்கு ஈப்போ நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பால்குடம், காவடிகள் போன்ற நேர்த்திக் கடன்களைச் செய்துக் கொண்டிருக்கின்றனர். இங்கு முருகன் அருளைச் சென்று பெற்றுக் கொள்வோம்'', என்று முத்தையா அண்ணாமலை கூறினார்.
''இந்த அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்திற்கு நான் சிறிய வயது தொடங்கி வந்துக் கொண்டிருக்கின்றேன். இன்று நடைபெறும் வைகாசி விசாக திருவிழா சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே, ஈப்போவில் வசிக்கின்ற அனைத்து இந்து பெருமக்களும் இந்த ஆலயத்திற்கு வந்து, காலையில் பால்குடம், மதியம் அன்னதானம் மற்றும் இரவு இரத ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்'', என்றார் மாறன் மோகன்.
இதனிடையே, வைகாசி விசாக திருவிழாவின் நிறைவு அங்கமாக, இன்றிரவு 7 மணிக்கு மேல், முருகப் பெருமான் ராஜ அலங்காரத்துடன் இரத ஊர்வலம் நடைபெறும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)