புத்ராஜெயா, 23 ஜூன் (பெர்னாமா) -- அண்மையில் உள்ளூர் நாளிதழ் ஒன்றில் 15-வது தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயிலை தொடர்புப்படுத்தி வெளியிடப்பட்ட தவறான தகவல் குறித்து உள்துறை அமைச்சு ஆராயும்.
சம்பந்தப்பட்ட ஊடகத்துடனான சட்ட நடவடிக்கை மற்றும் சந்திப்புகள் உட்பட அனைத்து கோணங்களிலும் உள்துறை அமைச்சு இவ்விவகாரத்தை கவனிக்கும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில், இன்று உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
கெஅடிலான் கட்சியின் உச்சமன்ற உறுப்பினராக, முஹமட் காலிட்டை தொடர்புப்படுத்தி அண்மையில் உள்ளூர் நாளிதழ் ஒன்று, தவறான விளக்கப்படத்தை வெளியிட்டது குறித்து சைஃபுடின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய அமலாக்க நிறுவத்தில் உள்ள உயர் அதிகாரியின் நற்பெயரை உள்ளடக்கிய அந்த விவகாரம் கடுமையான தவறாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இதே விவகாரம் குறித்து கருத்துரைத்த முஹமட் காலிட், தமது 40 ஆண்டுகால சேவையில், இதுவரை தாம் எந்தவோர் அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை என்று வலியுறுத்தினார்.
"அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்-இல் எனது 38 ஆண்டுகாலப் பணியில், நான் எந்த அரசியல் கட்சியிலும் ஈடுபட்டதில்லை," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
சம்பந்தபட்ட ஊடக நிறுவனம் தம்மை சந்திக்கக் கேட்டுக்கொண்டிருப்பதால் அவர்களை திறந்த மனதுடன் தாம் வரவேற்பதாகவும் முஹமட் காலிட் குறிப்பிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)