கோலாலம்பூர், 02 ஜூலை (பெர்னாமா) -- சிலாங்கூரில் 17 தமிழ்ப்பள்ளிகள் நிலப் பிரச்சனையை எதிர்நோக்கி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் நலனுக்காக சிறப்பு அமலாக்க செயற்குழு ஒன்றும் அறிமுகம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கைகளை ஒருங்கிணைத்து, திட்டங்களைச் செயல்படுத்தி கண்காணிப்பதிலும், பள்ளி அளவில் முன்முயற்சிகளை விநியோகிப்பதை விரைவுப்படுத்துவதிலும் அச்செயற்குழு முக்கிய பங்கு வகிக்கும் என்று வீ. பாப்பாராயுடு கூறினார்.
''சிலாங்கூரில் 99 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். அவை சிறப்பாக செயல்படுவதில் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை. இதில் சில பள்ளிகள், குறிப்பாக 17 தமிழ்ப்பள்ளிகள் நிலப் பிரச்சனையை எதிர்நோக்கி வருகின்றன. என்னிடம் அந்தப் பட்டியலும் உள்ளது. இன்று சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு அமலாக்க செயற்குழு ஒன்றை உருவாகியுள்ளோம். நிறைய உறுப்பினர்கள் உள்ளனர்,'' என்றார் அவர்.
கிள்ளானில், நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மன்ற ஆண்டுக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப்போது இந்தச் செயற்குழு குறித்து வீ. பாப்பாராயுடு தெரிவித்தார்.
இதனிடையே, நிலப் பிரச்சனைகளை பள்ளி தரப்பு கல்வி அமைச்சிடம் கொண்டுச் செல்ல வேண்டும் என்றுக் கூறிய அவர் அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
''பள்ளிகளில் நிலப் பிரச்சனை ஏற்படும் பொழுது, பள்ளி சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், எல்.பி.எஸ், பி.ஐ.பி.ஜி ஆகியோர் அவற்றை கல்வி அமைச்சிடம் கொண்டுச் செல்ல வேண்டும். அமைச்சுதான் முறையான அணுகுமுறையை மேற்கொண்டு எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் பிறகுதான் நாங்கள் செயல்படுத்த முடியும்,'' என்றார் அவர்.
மாநில முழுவதும் தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான பல்வேறு முக்கியத் தகவல்களை ஒன்றிணைக்கும் விதமாக, அதிகாரப்பூர்வ அகப்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கும் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் முன்னெடுப்பையும் பாப்பாராயுடு நன்றி பாராட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)