ஜார்ஜ்டவுன், 04 ஜூலை (பெர்னாமா) - கடந்த வாரம் ஆஸ்திரேலியப் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை,ஆடவர் ஒருவர் இன்று ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
தங்கும் விடுதியில் பகுதிநேரமாக பணிப்புரியும் எஸ்.பிரசாந்த், நீதிபதி ஜுராய்டா அப்பாஸ் முன்னிலையில் அக்குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டாலும் தமது சார்பில் வாதிட வழக்கறிஞரை நியமிக்க கால அவகாசத்தைக் கோரினார்.
உலோகத்தால் செய்யப்பட்ட கத்தரிக்கோளைக் காட்டி பயமுறுத்தி Perodua Axia ரக காரினுள் அந்த ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஜூன் 28-ஆம் தேதி, Mount Erskine தோட்டத்து கல்லறை அமைந்திருக்கும் பகுதியில் அதிகாலை மணி 5.20 முதல் 6 மணி வரையில் அவர் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகளுக்குக் குறையாத 30 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை தண்டனை மற்றும் பிரம்படி விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 376 உட்பிரிவு (2) (b)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்டவர் வேண்டுமென்றே இயற்கைக்கு புறம்பான பாலியல் உறவில் ஈடுபட்டதாக அவர் மீது இரண்டாவது குற்றம் பதிவாகியுள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 377C-இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.
ஆவணங்களைச் சமர்பிக்கவும், வழக்கறிஞரை நியமிக்கவும், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு இம்மாதம் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)