கோலாலம்பூர், 07 ஜூலை (பெர்னாமா) -- இரு மாதங்களுக்கு முன்னர் செந்தூலில் நடந்த கைகலப்பு ஒன்றில் ஆடவர் ஒருவரை கொலைச் செய்ததாக பாதுகாவலராகப் பணிபுரியும் ஆடவர் ஒருவர் இன்று கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
மஜிஸ்திரேட் எம். எஸ். அருண் ஜோதி முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 39 வயதுடைய கே. நாகேந்திரா தலையசைத்தார்.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மே 25-ஆம் தேதி இரவு மணி 9.23-க்கு செந்தூல் தாமான இந்தான் பைடூரி சாலை ஓரத்தில் 44 வயதுடைய கே. குமரனை கொலைச் செய்ததாக குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் நாகேந்திரா மீது குற்றம் பதிவாகியுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கும் குறையாத 40 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறை தண்டனை மற்றும் 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
பிரேத பரிசோதனையின் முடிவிற்காகக் காத்திருப்பதால் இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு செப்டம்பர் பத்தாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]