Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

வலியின்றி இரத்த தானம் செய்யலாம்

05/07/2025 06:18 PM

சிலிம் ரிவர், 05 ஜூலை (பெர்னாமா) - அறுவை சிகிச்சை, அவசர நிலை உதவிகள் உட்பட பல்வேறு மருத்துவ நடவடிக்கைகளுக்கும், உயிரைக் காப்பாற்றவும் உதவும் இரத்தத்தின் பங்களிப்பு இன்றியமையாதது.

அதனைக் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு சுமார்  80,000 இரத்த பாக்கெட்டுகளை சேகரிக்க பேராக் மாநில அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக இன்று சிலிம் ரிவர் பொது மருத்துவமனையில் இரத்த தான முகாம் தொடங்கப்பட்டதாக, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்தார்.

"பேராக் மாநிலத்தில் 48.32 விழுக்காட்டு சீனர்கள், 39.12 விழுக்காட்டு மலாயக்காரர்கள், 11.40 விழுக்காட்டு இந்தியர்கள் ஆண்டுதோறும் இரத்த தானம் செய்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் அதன் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இதற்கு பெரும் பாங்காற்றி வரும் மாநிலத்தின் இந்து சங்கத்தினருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்," என்று அவர் அவர் கூறினார். 

ஏனெனில், ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் பேராக் மாநில இந்து சங்கம் தொகுதி வாரியாக இரத்ததான முகாமை நடத்தி, அதிலிருந்து கணிசமான இரத்த பாக்கெட்டுகளை மாநில மருத்துவமனைகளின் தேவைக்கு அனுப்பி வருவதாகவும் சிவநேசன் கூறினார்.

இன்று காலை இரத்த தான முகாமை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது இரத்த தானத்தின் செயல்முறை எளிமையாக இருப்பதால் வலியின்றி பொதுமக்கள் இரத்த தானம் செய்யலாம் என்று வருகைப் புரிந்தவர்களில் சிலர் தெரிவித்தனர்.

வாடிக்கையாக இரத்த தானம் செய்யும் 61 விழுக்காட்டினருடன், முதல் முறையாக இரத்த தானம் செய்வதற்காக 31 விழுக்காட்டினரும் அங்கு வருகைப் புரிந்திருந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)