வாஷிங்டன் டி.சி., 06 ஜூலை (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் முன்னாள் நெருங்கிய ஆலோசகரான இலோன் மஸ்க் ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக நேற்று அறிவித்திருக்கிறார்.
அண்மையில் டிரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவ்விருவரும் சமூக ஊடகங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு கட்சிக்கு சவால் விடும் வகையில் தாம் புதிய அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக இலோன் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், கடந்த ஆண்டு தேர்தலில் டிரம்பின் மிகப்பெரிய அரசியல் நன்கொடையாளருமான இலோன் மஸ்க் டிரம்பின் சில அதிரடி நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் டிரம்பின் திட்டங்கள் அமெரிக்கர்களின் நலனை பாதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.
இதற்கு தீர்வுக்காணும் பொருட்டு The America Party எனும் புதிய கட்சி நிறுவப்படும் என்று X-இல் இலோன் பதிவிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் புதிய வரி சலுகைகள் மற்றும் அந்நாட்டின் செலவுகளை குறைக்கும் புதிய சட்டத்தை எதிர்த்து தாம் போராடவிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது வரிச் சலுகைகள் மற்றும் செலவு குறைப்புகளின் ஒரு பெரிய தொகுப்பிற்கான சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]