Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சிறந்த மனிதநேயமிக்கவர் சட்டம் அடுத்தாண்டு அமலுக்கு வரலாம்

06/07/2025 03:37 PM

புத்ராஜெயா, 06 ஜூலை (பெர்னாமா) - GOOD SAMARITAN எனப்படும் சிறந்த மனிதநேயமிக்கவர் சட்டம் அடுத்தாண்டு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் விரைந்து செயல்படுவதில் அதிக அக்கறை கொண்ட மடானி சமூகத்தை உருவாக்கும் பொருட்டு GOOD SAMARITAN சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

நல்ல நோக்கங்களுடனும் அலட்சியக் கூறுகள் இல்லாமலும் செய்யப்படும், CPR அவசர சிகிச்சை உட்பட அவசர உதவிகளை தானாக முன்வந்து வழங்கும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுவதை 'Good Samaritan' சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் விவரித்தார்.

தற்போது, ​​குறிப்பிட்ட விதிகள் இல்லாததால் முக்கிய சூழ்நிலைகளில் தலையிடுவதற்கு பலர் அச்சம் கொள்வதோடு, எதிர்பாரா அசம்பாவிதம் நிகழும் பட்சத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்ற பயமும் மக்களிடையே ஏற்படுவதாக  டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி கூறினார்.

"சிறந்த மனிதநேயமிக்கவர் சட்டம் இயற்றப்பட்டு வருகிறது. நாங்கள் அதற்கான கவனத்தைச் செலுத்த முயற்சிப்போம். சாதாரண மக்கள் பிறருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். அல்லது அது சார்ந்த அவசர நடவடிக்கைகளில் ஈடுபடும்போது இந்தச் சிறந்த மனிதநேயமிக்கவர் சட்ட மசோதாவின் மூலம் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்," என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயா, மலேசிய மருத்துவக் கழகக் கட்டிடத்தில் நடைபெற்ற உலக குடும்ப மருத்துவர் தினக் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்தபோது சுல்கிஃப்லி அஹ்மாட் அவ்வாறு குறிப்பிட்டார்.

சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதுபோன்ற சட்டங்கள் நீண்டகாலமாக அமலில் இருப்பதாகவும் கூடியவிரைவில் மலேசியாவிலும் அதனை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)