சுங்கைப் பட்டாணி, 06 ஜூலை (பெர்னாமா) - நேற்று காலை கெடா, ஜித்ராவில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவருடன் தொடர்புடைய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் மற்றோர் ஆடவரையும் போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
நேற்றிரவு மணி 7.50 அளவில் சுங்கைப் பட்டாணி பண்டார் புத்ரி ஜெயாவில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு மோதலில் அந்த 34 வயதுடைய சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.
"பல்வேறு மாநிலங்களில் ஆயுதமேந்தி கொள்ளையிடும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் இந்தியர் ஒருவரை கண்டுபிடித்ததுடன் அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அச்சமயத்தில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு மோதலில் அவ்வாடவரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்," என்றார் அவர்.
நேற்றிரவு சம்பவ இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த Fadil Marsus அவ்வாறு கூறினார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போலீசார் ஒரு துப்பாக்கியும் மேலும் பல பொருள்களையும் கண்டெடுத்தனர்.
சம்பந்தப்பட்ட ஆடவருக்கு 30க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், 2022 முதல் நகைக் கடைகளைக் கொள்ளையடிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வரும் ஒரு குழுவுடன் அவர் தொடர்பு உள்ளதாகவும் அவர் விவரித்தார்.
இதனால் சுமார் 60 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேலான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)