Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஆற்றில் பாய்ந்தது கார்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பலி

07/07/2025 04:48 PM

அலோர் ஸ்டார், 07 ஜூலை (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனதாக நம்பப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவரின் உடல்கள், இன்று கெடாவின் ஜித்ரா அருகே உள்ள கோரோக் ஆற்றில், கார் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டன.

அக்காரில் ஆடவர் ஒருவர், பெண் ஒருவர், மூன்று சிறார்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகிய அறுவரின் உடல்கள் இருந்ததாக கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் முதலாவது மண்டலத் தலைவர், முதலாவது மூத்த தீயணைப்பு அதிகாரி அஹமாட் அமினுடின் அப்துல் ரஹிம் கூறினார்.

இன்று காலை மணி 8.38 அளவில், கார் ஒன்று ஆற்றில் கவிழ்ந்திருப்பதாக தமது தரப்பிற்கு அழைப்பு வந்ததாக அஹமாட் அமினுடின் குறிப்பிட்டார்.

"காணாமல் போன பெரியவர்கள் இருவர், சிறார்கள் மூவர் மற்றும் 6 மாத ஒரு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் ஆறு பேர் என்றும் உயிரிழந்த அனைவரையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தொடர் நடவடிக்கைக்காக அச்சடலங்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்," என்றார் அவர்.

சனிக்கிழமை தொடங்கி, ஆறு மாதக் குழந்தை உட்பட ஆறு பேரை குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவர்கள் காணாமல் போயிருக்கலாம் என்றும் அஞ்சப்படுவதாக நேற்று பெர்னாமா செய்தி வெளியிட்டது.

ஜித்ராவின் தாமான் அமானில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிய பின்னர், ஜெர்லூனில் உள்ள தங்களின் இல்லத்திற்கு திரும்பாத 32 வயது முஹ்மட் அசிம் இசாட் ஈஷாக், அவரின் 31 வயது மனைவி நூருல் ஹிடாயா கலீஜா ரஸ்மான் எஃபான்டி, அவர்களின் நான்கு பிள்ளைகள் காணாமல் போனது கண்டறியப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)