ஆயர் குரோ , 07 ஜூலை (பெர்னாமா) -- கெடா, சுங்கை பட்டாணியில் போலி மருத்துவச் சான்றிதழை வெளியிட்டு விற்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பில் முழுமையான விசாரணை நிறைவடைவதற்கு தாம் காத்திருப்பதாக, அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்தார்.
அது தொடர்பில் இன்னும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முழுமையான அறிக்கையை தாம் இன்னும் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
''அது நடத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அறிக்கை என்னிடம் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார் அவர்.
போலி மருத்துவச் சான்றிதழை தயாரித்து விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஓர் இருதய நோயாளி உட்பட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அடிக்கடி மருத்துவ விடுப்பில் இருந்த போலீஸ் உறுப்பினர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான மருத்துவச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இவ்விவகாரம் அம்பலமாகியது.
இன்று, மலாக்கா, ஆயர் குரோ நடைபெற்ற மாநில அளவிலான Jelajah Taat Setia MADANI நிகழ்ச்சியில் கலந்துகொண்டப் பின்னர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)