சிபு, 07 ஜூலை (பெர்னாமா) - சரவாக், சிபுவில் கடந்த 105 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை மணி 10.30 தொடங்கி விமரிசையாக நடைபெற்றது.
சுமார் 20 லட்சம் ரிங்கிட் செலவில் உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தைக் காண வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகமான பக்தர்கள் வருகைப் புரிந்திருந்தாக ஆலயத் தலைவர் கே. மனோகரன் தெரிவித்தார்.
105 ஆண்டுகளுக்கு முன்னதாக தோட்டப் பாட்டாளிகளாக வேலைக்கு வந்த இந்தியர்கள் தங்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி சிறிய அளவில் இவ்வாலயத்தை இங்கு உருவாக்கினர்.
அவ்வாலயத்திற்கு வருகைப் புரியும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், பொதுமக்களின் வசதிக்காக ஆலயம் விரிவாக்கம் கண்டதாக மனோகரன் கூறினார்.
சரவாக் மாநிலத்திற்கு வருகைப் புரியும் சுற்றுப் பயணிகளையும் இந்த ஆலயம் வெகுவாக கவர்ந்திருந்ததால் ஆலயத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன்னதாக திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டதாக சரவாக் மாநில இந்து சங்கத் தலைவர் பிரபு கிருபா தெரிவித்தார்.
''சரவாக் மாநிலத்தில் இந்தியர்களின் அடையாளத்திற்கு இது பெரும் சரித்திரமாக உள்ளது. ஏனெனில் சரவாக்கில் கூச்சிங்கிலும் மீரியிலும் இந்து ஆலயங்கள் குறிப்பாக அம்மன் ஆலயங்கள் உள்ளன. ஆனால் சிபுவில் முதல் முறையாக புதிய நுட்பத்திற்கு ஏற்ப கட்டப்பட்ட முதல் ஆலயமாக இக்கோயில் உள்ளது,'' என்றார் அவர்.
அரசாங்கம் மற்றும் பொது மக்கள் வழங்கிய பேராதரவைத் தொடர்ந்து, இன்று சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாலயம் இருக்கும் சுற்றுவட்டாரத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் உள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)