கோலாலம்பூர், 09 ஜுலை (பெர்னாமா) -- வரிகள் தொடர்பான சவால்களை எதிர்கொண்டாலும், நியாயமான மற்றும் விரிவான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, மலேசியா அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடரும்.
அமெரிக்காவின் 25 விழுக்காட்டு வரி விதிப்பு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதலே அமலுக்கு வருவதால், மலேசியா விரைவில் பேச்சுவார்த்தைகளைத் தொடரவும், ஒரு தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்
இதனிடையே, மலேசியா மீதான வரியை 25 விழுக்காடு உயர்த்துவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவாகும்.
மாறாக, முந்தைய பேச்சுவார்த்தை செயல்முறையின் விளைவாக அல்ல என்று அவர் தெரிவித்தார்.
அந்த ஒரு விழுக்காட்டு அதிகரிப்புக்கான காரணத்தை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, யு.எஸ்.டி.ஆர் தெரிவிக்கவில்லை என்றும் சஃப்ருல் குறிப்பிட்டார்.
''அதை யு.எஸ்.டி.ஆர்-இடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் கேட்டு விட்டோம். அவர்களிடமும் பதில் இல்லை காரணம் அது அமெரிக்க அதிபரைப் பொருத்தது. ஏன் திடீரென ஒரு விழுக்காடு அதிகரித்து விட்டீர்கள் என்று ஜப்பான் கேட்டது போல. ஆனால், நாம் பேச்சு வார்த்தை கோணத்தில் பார்க்க வேண்டும். ஒரு விழுக்காடு மிகப்பெரிய எண் அல்லதான். தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் அது இன்னும் குறைவுதான்,'' என்றார் அவர்.
இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது சஃப்ருல் அவ்வாறு தெரிவித்தார்.
வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் முதலாம் தேதி தான் அமலுக்கு வருவதால், பேச்சு வார்த்தை நடத்த மலேசியாவிற்கு இன்னும் கால அவகாசம் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து மலேசியப் பொருட்களுக்கும் 25 விழுக்காடு வரி விதிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)