ஷா ஆலாம், 22 ஜூலை (பெர்னாமா) - மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்தியேக வேலை வாய்ப்பு கண்காட்சி வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஷாஆலமில் நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு தெரிவித்தார்.
மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு கண்காட்சி பல பகுதிகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆகக் கடைசியாக பண்டான் இண்டா, எம்பிஏஜே. மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் அதிகமான மாற்றுத்திறனாளி இளைஞர்களும் கலந்து கொண்டனர். இத்தகைய மாற்றுத்திறனாளி தரப்பினருக்கு உதவுவதில் மாநில அரசு கடப்பாட்டை கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்தியேக வேலை வாய்ப்பு கண்காட்சியை தாங்கள் ஏற்பாடு செய்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் திறமையை வெளிக்கொணர்வதற்கு ஏதுவாக ஆள்பலச் சந்தையின் நடப்புத் தேவையைப் கருத்தில் கொண்டு இத்தகைய தரப்பினர் மீது உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மேலும் ஒரு விழுக்காட்டு வேலை வாய்ப்புகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும்படி தனியார் துறையினரைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் பாப்பாராய்டு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)