Ad Banner
Ad Banner
 பொது

ETOMIDATE: அபாயகரப் போதைப் பொருள் சட்டத்தின் கீழ் பட்டியலிட ஆய்வு

30/07/2025 06:54 PM

புத்ராஜெயா, 30 ஜூலை (பெர்னாமா) - ETOMIDATE எனப்படும் ஒரு வகை நரம்பு வழி மயக்க மருந்து தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து அதனை 1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டத்தின் கீழ் பட்டியல் இடுவதற்கான பரிந்துரையைச் சுகாதார அமைச்சு துல்லியமாக ஆய்வு செய்கிறது.

நடப்பில் உள்ள மருத்துவ நடைமுறைகளின் அடிப்படையில், எந்தத் தரப்பினர் சமர்ப்பிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி அல்லது ஆய்வுகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு எப்போதும் தயாராக உள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

ETOMIDATE தற்போது 1952-ஆம் ஆண்டு நஞ்சு சட்டத்தின் கீழ் உள்ளது.

"எந்தவோர் ஆலோசனையையும் நாம் பரிசீலிக்கலாம். ஆனால், இறுதியில் நான் சான்றுகளைப் பார்க்கிறேன். மேலும், பொறுப்பான தணிக்கைத் துறை சான்றுகள் சார்ந்த அடிப்படையில் மதிப்பீடு செய்ய அனுமதிப்பேன்," என்றார் அவர்.

2025 தேசிய சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு மாநாடு மற்றும் சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு கிளையின் 30-வது ஆண்டு விழாவை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)