கோலாலம்பூர், ஜூலை 31 (பெர்னாமா) -- இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13-வது மலேசியத் திட்டம் ஆர்.எம்.கே-13, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 61 ஆயிரத்து 100 கோடி ரிங்கிட் முதலீடுகளை உள்ளடக்கி, அனைத்து துறைகளிலும் மதிப்பு உருவாக்கத்தின் அடிப்படையில் நிலையான வளர்ச்சியை இயக்கும்.
சிறந்த நல்லாட்சி, ஒட்டுமொத்த பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அனைத்து மக்களும் நன்மைகளை உணரும் வகையில், உள்ளடக்கிய மற்றும் ஏற்புத்தன்மை மிகுந்த மேம்பாடுகள் ஆகிய மூன்று முதன்மை அம்சங்களில், RMK13 கவனம் செலுத்தும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''இதில், அரசாங்கத்திடமிருந்து 43 ஆயிரம் கோடி ரிங்கிட் மேம்பாட்டு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும். வியூகத் துறைகளில் உள்நாட்டு நேரடி முதலீடு மூலம் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க GLC மற்றும் GLIC நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 12 ஆயிரம் கோடி ரிங்கிட் நிதியுதவி பெறப்படும். தனியார் துறை, பொது-தனியார் கூட்டமைப்பு, PPP வழியாக, 43 ஆயிரம் கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் சுமார் 6,100 கோடி ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டவை, அதாவது 22 ஆயிரத்து 700 கோடி ரிங்கிட் தேசிய வளர்ச்சியின் முக்கிய தூணான பொருளாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும்," என்றார் அவர்.
இன்று நாடாளுமன்றத்தில் 'மேம்பாட்டை மறுவடிவமைப்போம்' எனும் கருப்பொருளிலான 2026 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான 13-வது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்தபோது, பிரதமர் அதனைக் கூறினார்.
செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தும் ஆர்.எம்.கே 13, "மலேசியத் தயாரிப்பு" என்ற முன்முயற்சியையும் வலியுறுத்தி, நாட்டை உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடாக நிலைநிறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான மடானி பொருளாதாரக் கொள்கையின் தொடர்ச்சியாகவும் இந்த மேம்பாட்டுத் திட்டம் விளங்குவதாக நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
''13-வது மலேசித் திட்ட காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்கு 4.5 விழுக்காடு முதல் 5.5 விழுக்காடு வரை இருக்க வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தேவை, குறிப்பாக தனியார் பயன்பாடு மற்றும் முதலீடு, மற்றும் நாட்டின் மொத்த ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் 5.8 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேவை, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகள் வளர்ச்சியின் முக்கிய ஆதாரங்களாக விளங்கும்,'' என்றார் அவர்.
மத்திய அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், படிப்படியாக 3 விழுக்காட்டிற்கும் குறைவாகக் குறையும்.
அரசாங்கத்தின் கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காட்டிற்கும் மேல் போகாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனிநபர் மொத்த வருமானம், 77,200 ரிங்கிட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)