காஷ்மீர், 04 ஆகஸ்ட் (பெர்னாமா) - மாஸ்கோவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரேன் மீதான போருக்கு ரஷ்யாவிற்கு இந்தியா முன்வந்து நிதியுதவி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு புதுடெல்லி மீது அமெரிக்கத் அதிபர் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து நேற்று டிரம்பின் உயர்மட்ட உதவியாளர் ஒருவர் அவ்வாறு சாடியுள்ளார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா இப்போருக்கு நிதியளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று டிரம்ப் மிகத் தெளிவாகக் கூறி இருப்பதாக வெள்ளை மாளிகையின் துணைத் தலைவரும் டிரம்பின் மிகவும் செல்வாக்கு மிக்க உதவியாளர்களில் ஒருவருமான ஸ்டீபன் மில்லர் என்பவர் கூறினார்.
இந்தோ - பசிபிக்கில் அமெரிக்காவின் முக்கிய பங்காளிகளில் ஒன்றைப் பற்றி டிரம்ப் நிர்வாகம் இதுவரை கூறிய விமர்சனங்களில் மில்லரின் இந்தக் கருத்து மிகவும் வலுவான ஒன்றாகும்.
இக்கருத்துக்கு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், Moscow-விலிருந்து புதுடெல்லி தொடர்ந்து எண்ணெய் வாங்கும் என்று இந்திய அரசாங்க வட்டாரங்கள் சனிக்கிழமை ரோய்டர்சிடம் தெரிவித்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)