கோலாலம்பூர், 15 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், யூ.டி.எம்-இன் PALAPES பயிற்சியாளர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடினை இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு கல்லறையைத் தோண்டும்படி உத்தரவிடுமாறு அவரின் தாயார் மனுதாக்கல் செய்துள்ளார்.
நேற்று, ஷா ஆலம் உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் நரன் சிங் & கோ நிறுவனத்தின் மூலம் விண்ணப்பதாரரான உம்மு ஹய்மான் பீ டவுலாட்கன் (Ummu Haiman Bee Daulatgun) இந்த விண்ணப்பத்தைச் செய்ததாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கை கூறுகின்றது.
அந்த மனுவில், தேசிய போலீஸ் படைத் தலைவரான டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் மற்றும் தேசிய சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டுசுக்கி மொக்தார் ஆகியோரின் பெயர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
அம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை உம்மு ஹய்மான் பீயை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் டத்தோ நரன் சிங் இன்று உறுதிப்படுத்தினார்.
சிலாங்கூர், கம்போங் ரின்ச்சிங் உலு இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்ட ஷம்சுல் ஹரிசின் உடல் தோண்டி எடுக்கப்படுவதற்கான உத்தரவை தேசிய போலீஸ் படைத் தலைவர், தேசிய சட்டத்துறை தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பிறப்பிக்கும்படி உம்மு ஹய்மான் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, கோலாலம்பூர் மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள், 14 நாள்களுக்குள் இரண்டாவது பிரேதப் பரிசோதனையைச் செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பிக்கும்படி அவர் விண்ணப்பித்துள்ளார்.
தடயவியல் நிபுணர் டத்தோ ஶ்ரீ டாக்டர் புபிண்டர் சிங் மற்றும் தமது வழக்கறிஞர் நரன் அல்லது நரன் சிங் & கோ நிறுவனத்தின் பிரதிநிதி ஆகியோர் அச்செயல்முறையின் போது உடனிருக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அப்பெண் முன்வைத்துள்ளார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]