பாசிர் சாலாக், 17 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சமூக மேம்பாட்டுத் துறை கெமாஸ்சின் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப் பணிகளில் அமர்த்தும் பரிந்துரை, 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இணைக்கப்படலாம் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது அப்பரிந்துரை விவாத நிலையில் இருப்பதாகவும், அதனை செயல்படுத்தினால் கூடுதல் செலவுகள் எதுவும் இருக்காது என்றும் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான சாஹிட் விவரித்தார்.
''இந்தப் பதவி நிலைநிறுத்தப்பட்டால், அது புதிய நியமனங்களையோ அல்லது கூடுதல் அதிகரிப்புகளையோ உள்ளடக்காது. மேலும் ஓய்வூதியம் இல்லாமல் நிரந்தர வேலையாக மாறும் பிற ஒப்பந்தப் பணிகளுக்கு இது ஒரு அளவுகோலாகவும் பயன்படுத்தப்படலாம்,'' என்றார் அவர்.
இன்று, செபெராங் பேராக், பண்டார் பாரு பெல்கிரா மண்டபத்தில் நடைபெற்ற பேராக் மாநில அளவிலான கெமாஸ் கிராமப்புற நன்கொடைத் திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் சாஹிட் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள சுமார் 15,600 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் பணிகளில் அமர்த்தும் பரிந்துரை ஒன்று பொதுச் சேவைத் துறை JPA-இடம் வழங்கப்படவுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)