ஈப்போ, 28 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் பேராக் மாநிலத்தில் பல்வேறு போதைப் பொருள் குற்றங்களுக்காக மொத்தம் 13 ஆயிரத்து 997 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதோடு, ஒரு கோடியே 57 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பேராக் மாநில போலீஸ் துணைத் தலைவர் எஸ்.ஏ.சி முஹமட் அஸ்லின் சடாரி தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,727 ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 11 விழுக்காடு அதிகரித்து 1,918-ஆக உயர்ந்துள்ளதாக முஹமட் அஸ்லின் கூறினார்.
1985-ஆம் ஆண்டு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 51 பேர் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இவ்வாண்டு கைது செய்யப்பட்ட கும்பலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
''போதைப்பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,816 ஆகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட 4,257 பேருடன் ஒப்பிடும்போது 30 விழுக்காடு அதிகமாகும். சிறுநீரில் போதைப் பொருள் கலந்திருந்தது தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,212 ஆகும், 2024-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,852 ஆக இருந்த நிலையில் இது 8 விழுக்காடு குறைவாகும்'', என்றார் அவர்.
இன்று பேராக், போலீஸ் தலைமையகத்தில் குற்றப் புலனாய்வுத் துறை மேற்கொண்ட பறிமுதல் பொருள்களின் அழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.
அந்த காலக்கட்டத்தில் ஷாபு, கெத்தமின், ஹெரொயின் போன்ற போதைப்பொருட்கள் மாநிலத்தில் அதிகமாகப் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)