கோலாலம்பூர், 03 செப்டம்பர் (பெர்னாமா) -- ஆண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரச்சனையைத் தீர்வு காணும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வலுப்படுத்த அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இதில் உடல், உணர்வு மற்றும் பாலியல் சித்ரவதை ஆகியவை அதிகரித்து வந்தாலும் அது சார்ந்த புகார்கள் குறைவாகவே பதிவாகுவதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
ஆண்களும் வன்கொடுமையால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் ஆதரவு தேவை என்பதையும் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு அறிந்திருப்பதாக நோராய்னி அஹ்மாட் கூறினார்.
''ஆண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து அமைச்சு மிகவும் கவலையடைகின்றது. இருப்பினும், அது உண்மையில் குறைவாகவே பதிவாகின்றது. இரு வெவ்வேறு புள்ளிவிவரங்கள் உள்ளன. ஒன்று பி.டி.ஆர்.எம் வெளியிட்டது. மற்றொன்று, சமூகநலத் துறை வெளியிட்டது. வேறுபாடுகள் உள்ளன. ஆண்களும் வன்கொடுமையால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். மேலும், பாதுகாப்பு மற்றும் ஆதரவைப் பெறுவதற்கு உரிமை உள்ளது,'' என்றார் அவர்.
பாலின வேறுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொருந்தும் விதமாக 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்கொடுமை சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் சமூக நலத்துறை விசாரணை நடத்தும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)