புது டெல்லி, 22 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 50 விழுக்காட்டு வரி விதித்தைத் தொடர்ந்து உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வலியுறுத்தினார்.
அமெரிக்காவுடனான வர்த்தக தொடர்புகள் மோசமடைந்து வரும் சூழலில் மக்கள் இம்முயற்சியைப் பின்பற்ற வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் காணொளியின் வழி மோடி கேட்டுக்கொண்டார்.
''தெரிந்தோ தெரியாமலோ நாம் அன்றாட வாழ்வில் பல வெளிநாட்டுப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம். நமது பையில் இருக்கும் சீப்புக்கூட உள்ளூரில் தயாரிக்கப்பட்டதா அல்லது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதா என்பது நமக்குத் தெரியாது. அதையும் நாம் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்,'' என்றார் அவர்.
அமெரிக்கப் பொருள்களுக்கு 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒரு முக்கிய சந்தையாகும்.
பெரும்பாலும் அமெரிக்க இணைய சில்லறை விற்பனையாளரான Amazon.com-இல் இருந்து வாங்கப்படும் நிலையில் பல ஆண்டுகளான அந்நாட்டின் தயாரிப்புகள் இந்தியாவின் சிறிய நகரங்களையும் சென்றடைந்துள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சில்லறை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தும்படி வியாபாரிகளுக்கு மோடி அறிவுறுத்தினார்.
இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]