Ad Banner
Ad Banner
 உலகம்

பெரு: இடைக்கால அதிபர் & நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக போராட்டம்

16/10/2025 04:56 PM

லிமா, 16 அக்டோபர் (பெர்னாமா) -- பெரு நாட்டின் இடைக்கால அதிபர் ஜோஸ் ஜெரியும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என்று தலைநகர் லிமாவில் மக்கள் வன்முறை போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர். 

அந்நாட்டின் இளம் தலைமுறையினரான Gen Z இளைஞர் அமைப்புகள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள வேளையில், குற்றச்செயல்களை ஊக்குவிப்பதாக கூறும் ஒரு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பெருவில் கொலை மற்றும் ஊழல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு எதிரான போராட்டமும் தொடர்ந்து வருகிறது. 

இந்தகைய போராட்டங்களில் தொழிற்சங்கவாதிகள் மற்றும் 2022, 2023-ஆம் ஆண்டுகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்தனர்.

நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்பிலிருந்த இரும்புக் கம்பி வேலியை போராட்டக்காரர்கள் இடிக்க முயற்சித்தபோது அவர்களைத் தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிந்தனர். 

இரு தரப்பும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.

பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் உள்ள முக்கிய கட்சிகள் தங்கள் ஆதரவை மீட்டுக்கொண்டதை அடுத்து, பெருவின் முன்னாள் அதிபர் டினா பொலுவார்ட் கடந்த வெள்ளிக்கிழமை பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]