Ad Banner
Ad Banner
 உலகம்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் உடனடி சண்டை நிறுத்தம்

19/10/2025 01:34 PM

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை, 19 அக்டோபர் (பெர்னாமா) --   கடந்த ஒரு வாரமாக எல்லை தாண்டிய மோதல்களில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

சண்டை நிறுத்தம் தொடர்பான சில முக்கிய அம்சங்களை இறுதி செய்யும் பொருட்டு தொடர் கூட்டங்களில் கலந்து கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதாக கட்டார் வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர கட்டாரும் துருக்கியும் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.

ஏற்கனவே இரு நாடுகள் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட எண்மர் உயிரிழந்தனர்.

இதையடுத்து இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று கட்டார் அழைப்பு விடுத்து இருந்தது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நீட்டிப்பதற்கான வழிமுறைகளை வகுக்க இரு நாடுகளும் தற்போது இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)