Ad Banner
Ad Banner
 பொது

புங் மொக்தார் காலமானார்

05/12/2025 02:45 PM

கோலாலம்பூர், டிசம்பர் 05 (பெர்னாமா) -- சபாவின், கிணபாதங்கன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் இன்று அதிகாலை 1.46 மணிக்கு கோத்தா கினபாலு-வில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரின் மரணச் செய்தியை அவரது மகன் நைம் குர்னியாவன் மோக்தா உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 66 வயதுடைய புங் மொக்தார்-ரை சபா மாநில முதலமைச்சர் துன் மூசா அமன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அண்மையில், நடைபெற்ற 17-வது சபா மாநிலத் தேர்தலில்153 வாக்குகள் பெரும்பான்மையுடன் புங் மொக்தார் லாமாங் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

1999-ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 10-வது பொதுத் தேர்தலிலும் கிணபாதங்கன் நாடாளுமன்றத் தொகுதியை வென்று ஆறு முறை அத்தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகப் பணியாற்றினார்.

புங் மொக்தார் 1959-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி கிணபாதங்கன்-னில் உள்ள சுகாவ்-வில் பிறந்தார்.

இவருக்கு டத்தின் செரி நோர் அசிதா அலிமுதீன் மற்றும் டத்தின் செரி ஜிஸி இசெட் அப்டுல் சமட் என இரு மனைவிகளும் ஏழு பிள்ளைகளும் உள்ளனர்.

இன்று அதிகாலை காலமான கிணபாதங்கன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின்-னின் குடும்பத்திற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

தமது பழைய நண்பரும்  லாமாங் சட்டமன்ற உறுப்பினருமான புங் மொக்தார் மக்களின் நலன்களுக்கான போராடுவதில் உறுதியாகவும் வெளிப்படையாகவும் செயல்பட்டதை அன்வார் நினைவுக்கூர்ந்தார்.

அரசியலில் குறிப்பாக சபா மக்களுக்கும் நாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவை மற்றும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து அனைவரது நினைவிலும் இருக்கும் என்று பிரதமர்தமது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)