புத்ராஜெயா, 28 டிசம்பர் (பெர்னாமா) -- அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி முழுமையாக அமல்படுத்தப்படும் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யும் வகையில் சமூக ஊடகத்தள வழங்குநர்களுடன், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது.
சிக்கலான உள்ளடக்கத்தை நிவர்த்தி செய்வதில் உயர்மட்ட ஒத்துழைப்பைக் காட்டும் சில சமூக ஊடகத்தள வழங்குநர்கள் உள்ள அதேவேளையில், சிலர் இன்னமும் ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் இருப்பதும் எம்.சி.எம்.சி பெற்றுள்ள கருத்துகளின் வழி தெரியவந்துள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''டிக்டோக் போன்ற சில தளங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சில தளங்கள் உள்ளன. என்ன அனுப்பினாலும் எதையும் பொறுட்படுத்துவதில்லை,'' என்றார் அவர்.
பெர்னாமாவின் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் டத்தோ ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.
முன்னதாக எம்.சி.எம்.சி அறிவிப்பிற்கு ஏற்ப, 80 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக ஊடகத்தளங்கள் அதிகாரப்பூர்வமாக உரிமத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றாலும், அதன் நிறுவனங்களுக்கு மலேசிய சட்டங்கள் பொருந்தும் என்று அவர் விவரித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]