கோலாலம்பூர், 28 டிசம்பர் (பெர்னாமா) -- பொது இடங்களில் குப்பை வீசுவதைத் தடுக்கும் கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி அமலுக்கு வரும் சமூக சேவை உத்தரவைத் தொடர்ந்து, வீடமைப்பு மற்றும் ஊரட்சித் துறை அமைச்சு, கே.பி.கே.டி இறுதி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் குடிமைப் பொறுப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இப்புதியச் சட்டத்தை செயல்படுத்தும்படி அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, அதன் அமைச்சர் ஙா கோர் மின் தெரிவித்தார்.
பொது இடங்களில் குப்பை வீசும் வெளிநாட்டினர் உட்பட எந்தவொரு நபருக்கும் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் அதேவேளையில், 12 மணிநேரத்திற்கு பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று இன்று தமது முகநூல் பதிவில் Nga கூறினார்.
நகர்ப்புற தூய்மை அரசாங்கத்தின் அல்லது உள்ளூர் அதிகாரிகளின் கடமை மட்டுமல்ல.
மாறாக, அது அனைவரின் பொறுப்பாகும் என்று ஙா கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி வலியுறுத்தி இருந்தார்.
குறிப்பாக நகரங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசும் ஒரு சில தரப்பினரின் செயல் ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]