சிரம்பான், டிசம்பர் 30 (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன், லுக்குட்டில் கடந்த வாரம் சனிக்கிழமை ஆயுதமேந்தி குழு சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒன்பது பேரைப் போலீசார் கைது செய்தனர்.
20 முதல் 40 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் போர்ட்டிக்சன் சுற்றுவட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறிய நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மட் அதில் முதல் நபர் 24 மணிநேரத்திற்குள்ளும் மற்றவர்கள் அதற்கு அடுத்த நாளும் நேற்றைய தினமும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
''இச்சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு சந்தேக நபரையும் நாங்கள் இன்னும் தேடி வருகிறோம். அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டால் இவ்விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் போலீசார் வெற்றிகரமாகத் கைது செய்துள்ளதாக அர்த்தப்படும்'', என்றார் டத்தோ அல்சாஃப்னி அஹ்மட்.
நெகிரி செம்பிலான் மாநில உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது அமைதி துறையின் பேரிடர் பதிலளிப்புக் குழுவை இன்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ அல்சாஃப்னி அவ்வாறு கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கு முந்தையக் குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் சம்பவத்திற்கான உண்மையான நோக்கம் இன்னும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 326/427இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)