கோலாலம்பூர், ஜனவரி 01 (பெர்னாமா) -- மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் பேரசிரியார் ராஜா ஸரித் சோபியாவும் அனைத்து மலேசியர்களுக்கும் தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டு நாட்டிற்குத் தொடர்ந்து நல்வாழ்வையும் செழிப்பையும் கொண்டு வர வேண்டும் என்று மாமன்னர் தமது முகநூலில் பதிவேற்றிய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நல்லிணக்கத்திற்காக ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஒருவருக்கொருவர் மதிக்கவும் சுல்தான் இப்ராஹிம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
மலேசியா எப்போதும் கடவுளால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீடித்த அமைதி முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்வதாகச் சுல்தான் இப்ராஹிம் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அனைத்து மலேசியர்களும் வலுவான ஒற்றுமை உணர்வுடனும் ஒருமைப்பாட்டைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான உறுதியுடனும் 2026 புத்தாண்டில் அடியெடுத்து வைக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
அதோடு, மடானி அரசாங்கம் நம்பிக்கை, தைரியம் மற்றும் கருணையுடன் தொடர்ந்து செயல்படும் என்றும் அதன் பொறுப்புகளை முழு நேர்மையுடன் நிறைவேற்ற உறுதி கொண்டுள்ளதாகவும் நேற்று முகநூலில் பதிவேற்றிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)