Ad Banner
 பொது

ஹீலியம் எரிவாயு கலன் வெடிப்பு; இரு கடைகளும் மூன்று வாகனங்களும் சேதம்

03/01/2026 07:13 PM

காஜாங், ஜனவரி 03 (பெர்னாமா) -- நேற்று காஜாங், சுங்கை ராமலில் உள்ள உணவக வளாகத்தில் ஹீலியம் எரிவாயு கலன் வெடித்ததில் இரு கடைகள் மோசமாகச் சேதமடைந்த வேளையில் மூன்று வாகனங்களும் பாதிக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.   

பலூன்களில் நிரப்பப்படும் ஹீலியம் எரிவாயு கலன் வெடித்ததால் ஏற்பட்ட இத்தீ விபத்து நண்பகல் மணி 12 அளவில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் எந்தவொரு குற்றச் செயல்களும் இல்லை என்பது போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்திற்கான உண்மைக் காரணம் மற்றும் இழப்புகளின் மதிப்பு குறித்து இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

0.92 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சிறிய அறையில் அந்த எரிவாயு கலன் வைக்கப்பட்டிருந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

அந்த வெடிப்புச் சம்பவத்தினால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரோட்டான் வீரா, பெரோடுவா ஆக்சியா மற்றும் மைவி ரக வாகனங்கள் 30 விழுக்காடு வரை தீக்கிரையாகின.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)