Ad Banner
 உலகம்

ஐ.நா. அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகல்: குட்டரெஸ் கவலை

09/01/2026 07:38 PM

வாஷிங்டன் டி.சி, ஜனவரி 09 (பெர்னாமா) -- ஐக்கிய நாடுகளின் சபை ஐநாவின் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் முடிவு குறித்து அதன் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டேரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். 

பெரிய எண்ணிக்கையிலான அந்த அமைப்புகளுக்கு அமெரிக்காவின் நிதியுதவி கட்டாயமானது என்று அவர் வலியுறுத்தி கூறியதாக ஐநா பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.

''நாங்கள் தொடர்ந்து கூறியது போலவும் கோடிட்டுக் காட்டியது போலவும் ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கமான வரவு செலவுக்கான மதிப்பிடப்பட்ட பங்களிப்புகள் மற்றும் பொதுச் பேரவை அங்கீகரித்த அமைதி காக்கும் வரவு செலவுத் திட்டம் ஆகியவை அமெரிக்கா உட்பட ஒவ்வோர் உறுப்பு நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கீழ் சட்டப்பூர்வ கடமைகளாகும். அனைத்து ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களும் உறுப்பு நாடுகள் தங்களுக்கு வழங்கிய தங்கள் ஆணைகளைச் செயல்படுத்துவதைத் தொடரும். நம்மைச் சார்ந்துள்ள அனைவருக்கும் வழங்க வேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளது. மேலும், எங்களின் அதிகாரங்களை உறுதியுடன் தொடர்ந்து நிறைவேற்றுவோம்'', என்றார் ஸ்டீபன் டுஜாரிக்.

அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு முரணாகச் செயல்படுவதாகக் கூறி பல அனைத்துலக மற்றும் ஐ.நா. நிறுவனங்களிலிருந்து விலகுவதாக அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறிய நிலையில் அவற்றில் முக்கிய பருவநிலை ஒப்பந்தமும் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பை ஊக்குவிக்கும் ஐ.நா. அமைப்பும் அடங்கும்.

அமெரிக்கப் பட்டியலில் உள்ள 31 ஐ.நா. நிறுவனங்களில் பெரும்பாலானவை வழக்கமான ஐ.நா. வரவு செலவுத் திட்டத்தின் வழி நிதியளிக்கப்படும் வேளையில் டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து ஐ.நா.வுக்கு எந்த முறையான அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றும் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)