ரவாங், 11 ஜனவரி (பெர்னாமா) -- இன்று அதிகாலை, சிலாங்கூர் சுங்காய் புவாயா-வில் இருந்து ரவாங்கை நோக்கிச் செல்லும், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின்
441.2-வது கிலோமீட்டரில், பேருந்து மற்றும் மூன்று டன் லாரியை உட்படுத்தி நிகழ்ந்த சாலை விபத்தில், சுமார் 15 பேர் காயமடைந்த வேளையில், மேலும் மூவர் படுகாயங்களுக்கு ஆளாகினர்.
விபத்து குறித்து காலை மணி 5.24-க்கு தங்கள் தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
40 பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்களுடன் பயணித்த விரைவுப் பேருந்து மூன்று டன் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக அஹ்மட் முக்லிஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், 38 பயணிகள் பேருந்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், நால்வர் சிக்கிக் கொண்டதாக அவர் கூறினார்.
லாரி ஓட்டுநரும், லாரியில் சிக்கிக் கொண்டதாக, அஹ்மட் முக்லிஸ் தெரிவித்தார்.
இதனிடையே, விபத்தில் காயமடைந்த அனைவரும் தொடர் சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களில் எண்மர் பச்சை மண்டத்திலும், நால்வர் மஞ்சள் மண்டலத்திலும், மூவர் சிவப்பு மண்டலத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)