கோலாலம்பூர், 13 ஜனவரி (பெர்னாமா) -- தற்காப்பு அமைச்சு, எம்.ஐ.என்.டி.இ.ஃப்-இன் கீழ், சொத்துக்களை வாங்குவது தொடர்பிலான விவகாரத்தை அடுத்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம், அந்த அமைச்சுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும்.
எம்.ஐ.என்.டி.இ.ஃப்-வை உட்படுத்திய மிகப்பெரிய அளவிலான ஊழலாகக் கருதப்படும் இவ்விவகாரம் தொடர்பில், விசாரணைக்கு உதவுவதற்காழ்க மலேசிய இராணுவப் படை ஏ.டி.எம்-இன் உயர்மட்ட தலைவர்களும் அழைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதை எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி நிராகரிக்கவில்லை.
''இதற்குப் பின்னர் விரைவில், நான் அவரை (டத்தோஸ்ரீ முகமட் காலித் நோர்டின்) மற்றும் அமைச்சின் தலைமைச் செயலாளர் ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்து தற்காப்பு அமைச்சில் ஏற்பட்டுள்ள பல கொள்முதல் பிரச்சினைகள் குறித்து மேலும் விவாதிக்கப் போகிறேன். தற்காப்பு அமைச்சின் கொள்முதல் நடவடிக்கை, மக்களால் பேசப்படும் பிரச்சினையாகும். தற்போது விசாரிக்கப்படும் வழக்குகளின் அடிப்படையில் நாம் தெளிவாக கவனிக்க வேண்டும்,'' என டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
இன்று, கோலாலம்பூரில் எஸ்.பி.ஆர்.எம் மற்றும் ஹெல்ப் பல்கலைக்கழகம் இடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்குப் பின்னர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி அவ்வாறு கூறினார்.
தற்போது விசாரணையில் உள்ள வழக்குகளில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, இதற்கு முன்னர் பின்பற்றப்பட்டிருக்க சாத்தியம் உள்ள, எம்.ஐ.என்.டி.இ.ஃப்-பின் கொள்முதல் முறையில் நடப்பிலுள்ள பிரச்சனைகளையும் எஸ்.பி.ஆர்.எம், ஆராய்வதாக அவர் குறிப்பிட்டார்.
அமைச்சி நிர்வாகத்தைப் பாதிக்கக்கூடியவிதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் கசிவு பிரச்சினை அம்சங்கள் உள்ளிட்ட விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அசாம் பாக்கி வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)