Ad Banner
 பொது

பொங்கலுக்கான இறுதிகட்ட முன்னேற்பாடுகளில் களைக்கட்டியது பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா

13/01/2026 08:15 PM

பிரிக்பீல்ட்ஸ், 13 ஜனவரி (பெர்னாமா) --  தைப் பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சி இருக்கின்றன.

செழிப்பும் சுபிட்சமும் நிறைந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் தை மாதத்தின் முதல் நாளான பொங்கல் திருநாளைக் கொண்டாட இந்துக்கள் தை மாத விடியலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், வார நாளையும் பொருட்படுத்தாமல் பிரிக்பீல்ட்ஸ், லிட்டல் இந்தியாவில் பொங்கலுக்கான இறுதிகட்ட முன்னேற்பாட்டு வேலைகளில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவது பெர்னாமா செய்திகள் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காண முடிந்தது.

பொங்கல் திருநாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே சிலர் தங்களின் வீடுகளில் கரும்பு, மாவிலை, தோரணங்களைக் கட்டுவது, மண்பானையில் நீர் ஊற்றி ஊற வைப்பது, கோலமிடுவது போன்ற பல்வேறு முன்னேற்பாட்டு வேலைகளைச் செய்து முடித்திருப்பர்.

ஆனால், பணி நிமித்தமாக சிலர் இறுதி நேரத்தில் பொருட்களைத் தேடி வாங்குவது வழக்கமான ஒன்றாகும்.

அந்த வகையில், பிரிக்பீல்ட்சில் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில், இல்லத்தரசிகள், கணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என்று அதிகமானோர் மும்முரமாக இருந்தனர்.

அதிலும், இம்முறை மண் பானைகளுக்கு ஈடாக வெள்ளி பானைகளை வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டுவதைக் காண முடிந்தது.

''பொங்கலுக்கான அனைத்து பொருள்களையும் வாங்கி விட்டோம். பானைக்கூட பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஆனால், கரும்பு, தோரணம் இவை அனைத்தும் இறுதி நேரத்தில் தான் வாங்க முடியும். ஏனென்றால், அப்போதுதான் அவை செழிப்பாக இருக்கும்'', என்று கிஷன் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

''கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு வேலை என்பதால் இறுதி நேரத்தில் பொங்கலுக்கான பொருள்களை வாங்க வந்திருக்கின்றோம். அனைத்து பொருள்களும் வாங்கி விட்டோம். இனி அடுப்பில் பொங்கல் வைக்கும் வேலை மட்டும்தான் மிச்சம் உள்ளது'', என்றார் வளர்மதி சோளை அழகு.

இறுதி நேரத்தில் பொருள்கள் மலிவாகவும் செழிப்பாகவும் கிடைக்கும் அதேவேளையில், கூட்ட நெரிசலையும் போக்குவரத்து சிக்கலையும் தவிர்ப்பதற்காக வேலையையும் பொருட்படுத்தாது முன்கூட்டியே வந்திருப்பதாக, சிலர் கூறினர்.

''இன்று வேலை நாள் தான் இருந்தாலும் பொங்கலுக்கான பொருள்களை வாங்க நான் வந்திருக்கின்றேன். காரணம் இறுதி நேரத்தில் பொருள்கள் செழிப்பாக கிடைக்கும். அதோடு, நாளை முதல் நாள் என்பதாலும் கூட்ட நெரிசலும், போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும். எனவே, அதனை தவிர்க்க நான் முன்கூட்டியே வந்தேன்'', என்று இளமதி செல்லப்பன் கூறினார்.

இதனிடையே, பொங்கலை முன்னிட்டு சில கடைகள் பின்னிரவு மணி 12 வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)