நிபோங் திபால், 13 ஜனவரி (பெர்னாமா) -- ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் BAP எனப்படும் பள்ளி தவணைக்கான தொடக்கக் கட்ட உதவித் தொகையான 150 ரிங்கிட் எவ்விதக் கழிவுகளும் இல்லாமல், தங்கள் பிள்ளைகளின் பள்ளி தயார்நிலைப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக முழுமையாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் போன்ற வேறு ஏதேனும் திட்டங்கள் அல்லது கட்டணங்கள், தனியாகச் செலுத்தப்பட வேண்டுமே தவிர BAP மூலம் பிடித்தம் செய்யப்படக்கூடாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
''இந்த 150 ரிங்கிட் பள்ளி தயார்நிலை பணிகளுக்கான மடானி அரசாங்கத்தின் ஒதுக்கீடாகும். எனவே, வேறு பிரச்சனைகள், பிற கட்டணங்கள் இருந்தால், அவை வேறு வழிகளில் தீர்க்கப்பட வேண்டும். எனவே, இந்த 150 ரிங்கிட் பள்ளி தவணைக்கான உதவிக்கு மட்டுமே. மேலும் 150 ரிங்கிட் முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த 150 ரிங்கிட்டை பெறாத பெற்றோர்கள் இருந்தால், அது பத்து சென் குறைவாக இருந்தாலோ, ஒரு ரிங்கிட் குறைவாக இருந்தாலோ எங்களிடம் தெரிவிக்க வேண்டும். அதைக் குறைக்க முடியாது'', என்றார் அவர்.
இன்று, துன் சைட் ஷெ பராக்பா தேசிய இடைநிலைப்பள்ளியில் பினாங்கு மாநில அளவிலான 2026ஆம் ஆண்டு பள்ளி தவணைக்கான தொடக்கக் கட்ட உதவித் தொகையை வழங்கும் நிகழ்ச்சியில் ஃபட்லினா அவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாண்டில், நாடு முழுவதிலும் முதலாம் ஆண்டிலிருந்து படிவம் 6 வரைக்குமான சுமார் 52 லட்சம் மாணவர்களுக்குப் பயனளிக்கும் BAP அமலாக்கத்திற்கு அரசாங்கம் 80 கோடி ரிங்கிட்டிற்கும் மேல் ஒதுகீட்டு செய்துள்ளது.
அதேவேளையில், பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அடுத்த வாரத்திற்குள் பள்ளிகளில் மாணவர் பாதுகாப்புக் கொள்கையில் கையெழுத்திடுவதைக் கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று ஃபட்லினா கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)