ஜாசின், ஜனவரி 13 (பெர்னாமா) -- அமைப்பின் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் SERANTAU MUSLIM எனப்படும் ஓர் அரசாங்க சார்பற்ற அமைப்பின் முன்னாள் தலைவரான முஹமட் ஹக்கீம் முஹமட் நோர் மீது ஆறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி மலாக்கா செக்ஷன் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது.
மியன்மார், எமன் சிரியா மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளில் உள்ள அரசாங்க சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மனிதாபிமானப் பணிகளுக்காக அந்த அமைப்பு சேகரித்த உதவி நன்கொடையான ஐந்து லட்சத்து 76 ஆயிரத்து 995 ரிங்கிட் 40 சென்னைத் தவறாகப் பயன்படுத்தியதாக 39 வயதுடைய முஹமட் ஹக்கீம் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டது.
நீதிபதி எலிசபெத் பய வான் முன்னிலையில் தம்மீது சுமதப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மொழிப்பெயர்ப்பாளர் வாசித்த பின்னர் முஹமட் ஹக்கீம் அதை மறுத்து விசாரணைக் கோரினார்.
2019ஆம் ஆண்டு ஜூன் தொடங்கி 2021ஆம் ஆண்டு மே மாதம் வரையில் ஜாசின் மெர்லிமாவ் கிளையில் உள்ள Maybank Islamic நிறுவனத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியக் காரணத்தினால் குற்றவியல் சட்டம் செக்ஷன் 403இன் கீழ் முஹமட் ஹக்கீம் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இவ்வழக்கை செவிமடுத்த நீதிபதி எலிசபெத் 35,000 ரிங்கிட் ஜாமீன் தொகை மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் அவரை விடுவிக்க அனுமதி அளித்தார்.
இவ்வழக்கின் மறு செவிமடுப்பு மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)