Ad Banner
 உலகம்

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நியூயார்க் தாதியர் சங்கம்

13/01/2026 05:35 PM

நியூயார்க், ஜனவரி 13 (பெர்னாமா) -- நியூயார்க் மாநில தாதியர் சங்க உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனையில் உள்ள கொலம்பியா வளாகத்தில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பான பணியாளர் சூழ்நிலை மேம்பட்ட பணிச் சூழல் மற்றும் நியாயமான ஒப்பந்தம் ஆகியவற்றைக் கோரி இப்போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டம் நியூயார்க் வரலாற்றில் மிகப்பெரிய தாதியர் வேலை நிறுத்த போராட்டமாகக் கருதப்படுவதாகத் தொழிற்சங்கத் தலைவர்கள் விவரித்தனர்.

இப்போராட்டத்தில் பல மருத்துவமனைகளில் இருந்து சுமார் 15,000 தாதியர்கள் பணியை விட்டு வெளியேறினர்.

மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தாதியர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், நீண்டகாலமாக நிலவி வரும் பணியாளர் பற்றாக்குறை காரணமாகத் தாங்கள் கடுமையாக அழுத்தத்தில் உள்ளதாகத் தாதியர்கள் சிலர் தெரிவித்தனர்.

இதனால் தாதியர்கள் நோயாளிகளுடன் செலவிடக்கூடிய நேரம் குறைந்துவிட்டதாகவும் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

பணியாளர் ஒதுக்கீடு, சுகாதார நலன்கள் மற்றும் பணியிடப் பாதுகாப்பு உள்ளிட்ட தாதியர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தவறிய நிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகத் தொழிற்சங்கத் தரப்பினர் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)