கோலாலம்பூர், 14 ஜனவரி (பெர்னாமா) -- உலகின் முதன்நிலை கோபுர ஓட்டக்காரரான சோ வாய் சிங், மீண்டும் ஒரு மாபெரும் சாதனையுடன் இன்று மலேசிய சாதனைப் புத்தகம் எம்.பி.ஒ.ஆர்-ரில் இடம் பிடித்து வரலாறு படைத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இரண்டாம் புதன்கிழமையில் அனுசரிக்கப்படும் , உலக படிக்கட்டு ஏறும் தினத்தை முன்னிட்டு, கோலாலம்பூரில் உள்ள (Exchange 106) கோபுரத்தை 13 நிமிடம் 07 விநாடிகளில், ஓடி ஏறி முடித்து அவர் அச்சாதனைப் படைத்தார்.
(Exchange 106) கோபுரத்தை 14 நிமிடங்களுக்குள் ஓடி ஏறி முடிக்க வேண்டும் என்று எம்.பி.ஒ.ஆர் நிபந்தனை விதித்த நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்குள்தமது இலக்கை வெற்றிகரமாக அடைந்து சோ வாய் சிங் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.
2026 -ஆம் ஆண்டிற்கு இச்சாதனை தொடக்கம் மட்டுமே எனவும், இதற்குப் பிறகும் பல இலக்குகளை அடைய தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
''2026 ஆம் ஆண்டில் ஆறு மலேசிய சாதனைகள் படைக்க இலக்கு உள்ளது, இப்போது ஒன்று நிறைவேறியது. இன்னும் ஐந்து உள்ளன. அடுத்த சாதனைக்கான அறிவிப்பை வெளியிடுவேன். ஏனென்றால் இப்போது வாய் சிங் அனைவராலும் அறியப்பட்டவர். எப்போதும் போட்டிகளில் வெற்றி பெறுபவர் மற்றும் நிகரற்றவர் போல் தெரிகிறது. ஆனால் அந்த சாதனையை சவால் செய்ய வேண்டும், மனித வரம்புகளை சவால் செய்ய இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது,'' என சோ வாய் சிங் கூறினார்.
இந்த சாதனை விழாவிற்கு தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் வருகை புரிந்த வேளையில், சாதனை படைத்த வாய் சிங்-கிற்கு எம்.பி.ஒ.ஆர் அதிகாரி, அங்கீகாரச் சான்றிதழை வழங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)