Ad Banner
 பொது

தீங்கான உள்ளடக்கம் தொடர்பான சிக்கல் தீர்ந்த பின்னரே ‘க்ரோக்’ தடையினை நீக்கம்

15/01/2026 04:47 PM

கோலாலம்பூர், ஜனவரி 15 (பெர்னாமா) -- தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவது தொடர்பான சிக்கல்களை அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய X தரப்பால் முழுமையாக தீர்க்கப்பட்ட பின்னரே ‘க்ரோக்’ (Grok) செயற்கை நுண்ணறிவு AI அமைப்பின் செயல்பாடுகள் மீதான தற்காலிகத் தடை நீக்கப்படும்.

தற்காலிகத் தடை முழுமையாக நீக்கப்படுவதற்கு முன்னர் துஷ்பிரயோகம் செய்யக்கூடிய காணொளி அல்லது பட உள்ளடக்கம் இனி தயாரிக்கப்படவில்லை என்பதை X தரப்பு முழுமையாக நிரூபிக்க வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்  தெரிவித்தார்.

ஆபாசமான உள்ளடக்கம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சம்மதமின்றி கையாளப்பட்ட படங்கள் இருப்பதால் அத்தடை விதிக்கப்பட்டதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் MCMC தெரிவித்துள்ளது.

X Corp மற்றும் xAI LLC நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை அறிவிக்கைகள் வெளியிடப்பட்ட போதிலும் ஆபாச மற்றும் வெளிப்படையான உள்ளடக்கத்தை உருவாக்க க்ரோக்-ஐ மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்ததைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

''இணையத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை செயலிழக்கச் செய்வதிலும், அதன் தயாரிப்பைத் தடுப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றால், குரோக் மீது அரசாங்கம் தற்காலிகமாக விதித்த தடையை நீக்கும்.''
என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் 

இன்று, சிலாங்கூர், கோம்பாக்கில் Centre for Responsible Technology (CERT)-ஐ தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி, மலேசியாவில் உள்ள பயனர்களுக்கு AI க்ரோக்-ஐ அணுகுவதற்கு MCMC தற்காலிக தடை விதித்து அமல்படுத்தியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)