கோலாலம்பூர், ஜனவரி 16 (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் மலேசியப் பொருளாதாரம் 5.7 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் ஒட்டுமொத்த ஆண்டின் வளர்ச்சி 4.9 விழுக்காடாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.
45 ஆயிரத்து 510 கோடி ரிங்கிட் மதிப்புள்ள இவ்வளர்ச்சி 2024-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த ஒன்று மட்டுமின்றி இது அரசாங்கத்தின் இலக்கான 4.0 முதல் 4.8 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம் என்று மலேசியப் புள்ளிவிவரத் துறை DOSM தெரிவித்தது.
பொருளாதாரத்தின் முக்கிய துறைகளின் ஊக்கமளிக்கும் செயல்திறன் மற்றும் வலுவான உள்நாட்டு தேவை ஆகியவை 2025-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் கணிக்கப்பட்ட வளர்ச்சிக்கு துணைபுரிந்ததாக மலேசிய புள்ளிவிவரத் துறை தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் கூறினார்.
மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், போக்குவரத்து மற்றும் சேமிப்பு, உணவு, பானங்கள் மற்றும் தங்கும்விடுதி போன்ற துணைத் துறைகளின் மூலம் அக்காலாண்டில் சேவை துறை 5.4 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.
அதேவேளையில், மின்சாரம், மின்னணு மற்றும் ஒளியியல் துரை உற்பத்தி பொருட்கள் காய்கறிகள் மற்றும் விலங்குகளிலிருந்து உருவாக்கப்படும் எண்ணெய் உட்பட உணவு பதப்படுத்துதலின் வழி உற்பத்தித் துறை 6.0 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)