கோத்தா கினபாலு, 17 ஜனவரி (பெர்னாமா) -- வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள அண்மைய வானிலை நிச்சயமற்றத் தன்மையைத் தொடர்ந்து, பேரிடர் முன்னெச்சரிக்கை செயல்முறையை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.
இவ்வாண்டு பருவமழை மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அண்மைய கணிப்புகள் காட்டுவதால், அந்நடவடிக்கை முக்கியமானது என்று இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர்தர் ஜோசப் குரூப் கூறினார்.
''சபாவில் நாம் பார்ப்பதுபோல, இந்த ஆண்டு எம்.டி.எல் நீண்டதாக இருக்கலாம். மார்ச் மாதத்தை எட்டக்கூடும் என்று மலேசியா கணிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, சொத்துக்கள் அதிகரிப்பு மற்றும் நிர்வாக ஆற்றல் ஆகியவற்றுடன், நமது கணிப்பையும் மேம்படுத்த வேண்டும். அமைச்சில் உள்ள நாங்கள் வானிலையைக் கணிக்க முடியும். ஆனால், வானிலையைக் கட்டுப்படுத்த முடியாது,'' என டத்தோ ஶ்ரீ ஆர்தர் ஜோசப் குரூப் கூறினார்.
இன்று, கோத்தா கினபாலு, சபா என்.ஆர்.இ.எஸ் வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழாவை தொடக்கி வைத்தப் பின்னர் டத்தோ ஶ்ரீ ஆர்தர் ஜோசப் செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்வாறு கூறினார்.
மேலும், எம்.தி.எல்-லை கையாள்வது உட்பட எந்தவொரு சாத்தியமான பேரழிவையும் எதிர்கொள்ளும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல்மிக்க நிர்வகிப்பு மூலம் துல்லியமான கணிப்புகள் மிக முக்கியமானவை என்றும் அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)