Ad Banner
 சிறப்புச் செய்தி

பினாங்கில் தைப்பூசத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் - ராயர்

17/01/2026 08:11 PM

ஜார்ஜ்டவுன், ஜனவரி 17 (பெர்னாமா) -- வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி முதலாம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படவிருப்பதால், பினாங்கில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு அதிகமான பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பக்தர்களின் நலன் கருதி, தைப்பூசத் திருவிழா சுமுகமாக நடைபெறுவதை உறுதிச் செய்யும் பொருட்டு, பாதுகாப்பு மற்றும் தயார்நிலை பணிகள் தொடர்பான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக LWHPP எனப்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் ராயர் ராயர் தெரிவித்தார்.

அதோடு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதை தவிர்க்க, ரதக் காவடிகளும் முன்கூட்டியே பெர்மிட்டுக்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டும் என்றும் ராயர் அறிவுறுத்தினார்.

தைப்பூச தினத்தன்று கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பக்தர்கள் குறிப்பாக, பெண்கள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் முன்கூட்டியே அல்லது ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தங்களது நேர்த்திக் கடனை செலுத்தலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், தைப்பூசத் திருவிழாவிற்கு ஒரு நாள் முன்னதாக, லெபோ குவினில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்க ரதமும் லெபோ பினாங்கில் உள்ள நகரத்தார் கோவில் வீடு ஆலயத்திலிருந்து வெள்ளி ரதமும் புறப்படும் என்றும் ராயர் தெரிவித்தார்.

அதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொது மக்களும் இரத ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2026-ஆம் ஆண்டு தைப்பூச கொண்டாட்டம் தொடர்பில் பெர்னாமா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் வழி ராயர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)