Ad Banner
 உலகம்

எட்டு ஐரோப்பிய நாடுகளுக்குக் கூடுதல் வரி - டிரம்ப் அறிவிப்பு

18/01/2026 04:17 PM

அமெரிக்கா, 18 ஜனவரி (பெர்னாமா) -- கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்த நிலையில்,

டென்மார்க், நார்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பிப்ரவரி முதலாம் தேதி தொடங்கி பத்து விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்தார்.

அந்த எட்டு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு பிப்ரவரி முதலாம் தேதி தொடங்கி கூடுதலாக பத்து விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று தமது Truth Social சமூக ஊடக தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இதன் வழி, ஜூன் முதலாம் தேதி தொடங்கி, அந்த நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் வரி 25 விழுக்காடு உயர்வு காணும்.

கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டும் வரை வரி உயர்வு தொடரும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியாக உள்ள கிரீன்லாந்து, தன்னாட்சி அதிகாரம் பெற்ற தீவாகும்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறிவரும் டிரம்ப், அதனைக் கைப்பற்றும் முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் அத்தீவு விற்பனைக்கு இல்லை என்றும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக அதனை மாற்ற விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)