சிலாங்கூர், 18 ஜனவரி (பெர்னாமா) -- பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தான திருத்தலத்தில் மின்படிகட்டுகள் கட்டுவதற்கான செயல்முறைகள் இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதன் கட்டுமானத்தை விரைவில் மேற்கொள்வது பல தரப்பினருக்கு மிகவும் பயனளிக்கும்.
எனவே, பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் இம்முயற்சிக்கு தமது முழு ஆதரவு இருப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு தெரிவித்திருக்கிறார்.
''கலகம் பிறந்ததான் நியாயம் பிறக்கும்னு என்று கூறுவார்கள். இன்று எழுந்திருக்கும் இப்பிரச்சனைக்கு அனுமதி பெற்று விரைவில் அதன் தொடர்பான பணிகளைத் தொடங்க வேண்டும். இந்த மின்படிகட்டை நிர்மாணிப்பது அனைவருக்கும் நன்மையளிக்கும். உதவும் கரங்கள் மூலமா அதிகமானோரை மலைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். இது ஒரு நல்ல சேவை. எனினும், மின்படிகட்டு இருந்தால், மிகபெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். இதனால் பொது மக்களும் பயனடைவார்கள். இதற்கு எனது முழு ஆதரவு இருக்கும்,'' என்றார் அவர்.
பத்துமலை திருத்தலத்தில் மின்படிகட்டு கட்டப்படவிருக்கும் நிலத்திற்கான தற்காலிக ஆக்கிரமிப்பு உரிமம், டி.ஓ.எல்-ஐ கோரி தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்ட விண்ணப்பம் குறித்து மாநில அரசாங்கம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது.
அது தொடர்பாக, இன்று நிர்வாக அலுவலகத்தில் இரு தரப்புகளுக்கும் இடையே கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் தங்கள் தரப்பு நீதிமன்ற செயல்முறையைப் பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதை , இதே கூட்டத்தில் கலந்து கொண்ட ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா சுட்டிக்காட்டினார்.
''நாங்கள் அனைத்தையும் விளக்கி தேசிய சட்டத்துறை தலைவருக்கு கடிதம் எழுதி வழக்கு தொடருவதற்கு அனுமதி வாங்கிவிட்டோம். வழக்கு தொடருவது பணம் கேட்க அல்ல. அங்கு மின்படிகட்டு கட்டவே. நாங்கள் ஆர்.ஓ.எஸ்-இல் இல்லை. நாங்கள் நீதிமன்ற உத்தரவிலேயே இருக்கிறோம்,'' என்று அவர் கூறினார்.
அந்த அடிப்படையில் விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வரும் 21ஆம் தேதி அதற்கான வழக்கு நிர்வகிப்பு நடைபெறவிருக்கிறது.
இவ்விவகாரத்திற்கான முடிவு நீதிபதியிடமே இருப்பதாகவும், ஆலய நிர்வாகம் தம்மால் முடிந்த செயல்முறை அனைத்தையும் மேற்கொண்டிருப்பதாகவும் நடராஜா குறிப்பிட்டார்.
''21ஆம் தேதி வழக்கு நிர்வகிப்பு. அந்நாளில் எதிர்தரப்புடன் பேசி நல்லதொரு தீர்வைக் காணலாம் என்று கோபிந்த் சிங் கூறுகிறார். கோவில் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கவில்லை. கோவில் தலைவர் என்ற முறையில், கோவில் அறங்காவலர் என்ற முறையில்தான் அவர் விண்ணப்பித்தார். சங்கம் மூலமாகத்தான் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது,'' என்று அவர் மேலும் விவரித்தார்.
எனவே, மின்படிகட்டு கட்டுவதற்கான தொடக்கக்கட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ள வேளையில், நீதிமன்றத்தின் முடிவுக்கு இணங்கவே அப்பணிகள் தொடரப்படும் என்று நடராஜா தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)