புத்ராஜெயா, 18 ஜனவரி (பெர்னாமா) -- பார்வை குறைப்பாடோடு இருந்தாலும், தமது கனவுகளை நிறைவேற்ற முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில்,
இன்று, புத்ராஜெயாவில் நடைப்பெற்ற டுவின்சிட்டி மராத்தோன் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொண்ட, 79 வயதுடைய மைக்கல் தாம் வோன் தெங், 7 மணி நேரம் 12 நிமிடத்தில் முழு தூரத்தையும் கடந்து சாதனை படைத்துள்ளார்.
முழு மராத்தோன், அரை மராத்தோன் 12 கிலோ மீட்டர் மற்றும் மாணவர்களுக்கான பிரிவு என நான்கு பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்பட்டது.
முழு மாரத்தான் பிரிவில் பங்குப்பெற்ற மைக்கல் தாம் வோன் தெங், கடந்த 16 மாதங்களாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இப்போட்டியில் தாம் கலந்து கொண்டதால், மலேசிய பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், எம்.பி.எஸ்.ஏ வழி, உலகளவில், பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை பெற்றுத் தர முடியும் என்று மைக்கல் தாம் வோன் தெங் கூறினார்.
''இது நான் கலந்துக் கொள்ளும் முதல் மரத்தோன் போட்டி. 79 வயதில் மரத்தோன் நெடுந்தூர பந்தயத்தை வெற்றிகரமாக கடந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. என்னை போலவே பார்வையற்றிருக்கும் பலர் ஆரோக்கியமான வாழ்க்கை பின்பற்றும் வகையில், விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே எனது ஆசை. குறிப்பாக, பார்வை இல்லாத இளைஞர்களுக்கு இம்முயற்சி பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வெண்டும்,'' என மைக்கல் தாம் கூறினார்.
பல தடைகளை தாண்டி, இன்று தமது நீண்ட கால கனவை மைக்கல் எட்டிப் பிடித்துள்ளதாக அவரின் பயிற்றுனர் கர்ணன் முருகேசன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
''பார்வையற்றவர்களை பயிற்சிக்கும் எனது வகுப்பில் 10-12 பேர் வரை உள்ளனர். அதில் மைக்கலும் ஒருவர். அவ்வாறு தான், எனக்கு அவரை 7 வருடங்களாக தெரியும். ஒரு நாள் தான் மரத்தோனில் பங்குப்பெற வேண்டும் என்றார். முதலில் அது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும் இன்று அவரின் சாதனைக்கு நானும் ஒரு சிறிய பங்கு என்று எண்ணும் போது மகிழ்ச்சியாக உள்ளது,'' என கர்ணன் முருகேசன் கூறினார்.
பார்வையற்றவராக இருந்தாலும், தமது விடாமுயற்சியால் தினசரி நடத்தப்படும் பயிற்சியில் முழு மூச்சோடு ஈடுபடும் மைக்கல்-இன் ஆர்வம், சாதிக்கும் எண்ணம் கொண்ட அனைவராலும் வெற்றிப்பெற முடியும் என்பதை புலப்படுத்துவதாக அவரின் பாதுகாவலர் ஏட்ரியன் யோ கூறினார்.
''ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை 4:30 மணியளவில் நான் அவருக்கு பயிற்சி வழங்குவேன். எவ்வித குறையும் சொல்லாமல் அயராது உழைத்தது இவர், ஆக இந்த வெற்றி அவருடையது,'' என ஏட்ரியன் யோ தெரிவித்தார்.
ஜனவரி 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் டென் சென்சஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த மராத்தோன் ஓட்டப்பந்தய போட்டியில் சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)