Ad Banner
 பொது

கட்டுமானப் பணி நிறைவு பெறாத ஈப்போ பாலம் தைப்பூசத்திற்காக திறக்கப்படும்

19/01/2026 03:55 PM

ஈப்போ, 19 ஜனவரி (பெர்னாமா) --  அடுத்த மாதம் முதலாம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு பேராக், ஈப்போவில் உள்ள பக்தர்கள் பலர் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்த தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், புந்தோங் மற்றும் பிற இடங்களுக்குச் செல்ல பயன்படுத்தப்படும் ஜாலான் துன் ரசாக் சாலையில் உள்ள ஒரு பிரதான பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவுப் பெறாத நிலையில், ஈப்போவில் உள்ள மஹா மாரியம்மன் ஆலயத்திலிருந்து கல்லுமலை ஶ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு மட்டும் பாலத்தின் சிறு பகுதி திறந்துவிடப்படும் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் கூறினார்.

''தைப்பூசம், அதாவது பால்குடம் மற்றும் காவடி எடுப்பவர்களுக்கு மட்டும்தான் அந்த பாலத்தை நம்மால் திறக்க முடியும். மற்ற வாகனங்கள் அல்லது பொதுமக்களின் பிற தேவைகளுக்காக நாங்கள் திறக்க மாட்டோம். அதேபோல மாநில அரசாங்கத்தின் தலைமையில் நாங்கள் போக்குவரத்து நெரிசல் சுமூகமாக இருப்பதைப் பார்த்து கொள்வோம்'', என்றார் அவர்.

குறிப்பிட்ட சில காரணங்களுக்காக பாலத்தின் கட்டுமான பணி நிறைவுப் பெறாமல் போனதாக அவர் கூறினார்.

மேலும், தைப்பூசத்தின் போது அதிகமான பக்தர்கள் அந்த பாலத்தைப் பயன்படுத்தும் சூழல் ஏற்படுவதால், அதன் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, துளசி மனோகரன் தெரிவித்தார்.

இம்மாதம் 28-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நேர்த்திக் கடனைச் செலுத்தும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக அப்பாலம் திறக்கப்பட்டிருக்கும் என்று, இன்று மாநில அரசாங்க அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் துளசி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)